புலம்பல் 3:46-66

புலம்பல் 3:46-66 TCV

“எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும், பாழும் அழிவும் வந்தன.” என் மக்கள் அழிக்கப்பட்டதனால் என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது. என் கண்கள் ஓய்வின்றி, கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும். பரலோகத்திலிருந்து யெகோவா கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும். என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில், என் ஆத்துமா துக்கிக்கிறது. காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள், என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள். அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்; வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது. நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன். யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து, உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன். “ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்” என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர். நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, “நீ பயப்படாதே” என்றீர். யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர். யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். நீர் எனக்காக வாதாடும்! அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர். யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்; அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள். அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள். யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும். அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும். கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த புலம்பல் 3:46-66