2 கொரிந்தியர் 10:11-18

2 கொரிந்தியர் 10:11-18 TCV

நாங்கள் உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது கடிதத்தின் மூலமாய் சொல்வதைத்தான், நாங்கள் உங்களுடன் இருக்கும்போதும் செயல்படுத்துவோம் என்பதை அப்படிப்பட்டவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். உங்கள் மத்தியில் தங்களை உயர்வாய்க் காட்டிக்கொள்கிறவர்களுடன், எங்களை இணைத்துப் பார்க்கவோ அல்லது ஒப்பிட்டுப் பார்க்கவோ நாங்கள் துணிவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த அளவீடுகளினாலேயே, தங்களை மதிப்பீடு செய்துகொள்ளும்போதும், தங்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும்போதும், அவர்கள் கொஞ்சமும் ஞானமில்லாதவர்களாய் இருக்கிறார்களே. ஆனால் நாங்களோ, எங்களைப் பொறுத்தவரையில் எல்லைமீறிப் பெருமைபாராட்டுவதில்லை. இறைவன் எங்களுக்கு நியமித்த எல்லையைக் குறித்தே நாங்கள் பெருமை கொள்ளுவோம். அந்த எல்லை உங்களையும் உள்ளடக்குகிறது. நாங்கள் தவறாகப் பெருமைப்படவில்லை. நாங்கள் உங்களிடம் வராதிருந்தால், இது உண்மையாய்தான் இருக்கும். ஆனால் நாங்களோ, நீங்கள் இருக்கும் இடம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியுடன் வந்தோமே. நாங்கள் மற்றவர்கள் செய்யும் வேலையை, எங்களுக்குரியதாக்கிப் பெருமை கொள்வதில்லை. அது அளவுக்கு மீறிய செயலே. ஆனால், உங்களுடைய விசுவாசம் தொடர்ந்து பெருகவேண்டும் என்பதும், உங்கள் மத்தியில் எங்கள் ஊழியம் வெகுவாக விரிவடைய வேண்டும் என்பதுமே எங்கள் எதிர்பார்ப்பு. அதற்குப் பின்பு, உங்களுக்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் நாங்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்போம். அப்பொழுது, வேறொரு மனிதன் ஏற்கெனவே செய்த ஊழியத்தைக் குறித்து, நாங்கள் பெருமைபாராட்ட இடம் ஏற்படாது. வேதவசனம் சொல்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.” ஏனெனில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகிறவனே ஏற்றுக்கொள்ளப்படுகிறவன்.