புலம் 3:46-66

புலம் 3:46-66 IRVTAM

எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள். பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது. மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை, என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது. என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது. காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள். படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள். தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன். மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர். ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர். யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும். அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும், எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர். அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன். யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர். அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த புலம் 3:46-66