YouVersion Logo
Search Icon

Plan Info

இவைகளில் அன்பே பிரதானம்Sample

இவைகளில் அன்பே பிரதானம்

DAY 24 OF 26

பெற்றோருக்கு வயதாகும் போது செய்யப்பட வேண்டிய காரியங்களை நீங்கள் திட்டமிட்டிருந்தால் அல்லது ஜெபத்தோடு திட்டமிட்டுக் கொண்டிருந்தால், அதை நீங்கள் விரும்பும் அந்த நபரோடு பகிர்ந்து கொள்ளும்போது, அவர் அந்த திட்டத்தில் உங்களை போல அல்லது உங்களைவிட அதிகமாய் ஆர்வமாய் இருக்கிறாரா என்று கவனியுங்கள். அவருக்கு அதில் ஆர்வம் இல்லாமல், “அதனால் பணம் விரயமாகும்”, “உன்னால் பண நஷ்டம் ஏற்படும்” என்று அதை கேலியும் கிண்டலுமாக பேசி, உங்கள் பெற்றோரை அவமதிக்க முற்பட்டால் எச்சரிக்கையாய் இருங்கள். அந்த நபருக்கு உங்கள் பெற்றோரைக் கனம்பண்ணும் விதமாக செய்யப்படும் காரியங்கள் அன்பின் விதைகள், அதில் ஆசீர்வாதம் அடங்கியுள்ளது, தேவன் அதைக் கனம்பண்ணுகிறார் என்பது புரியாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஆளோடு வாழ்நாள் முழுவதும் வாழவேண்டுமா என்று தீர ஆலோசித்து, ஜெபத்தில் அதிக நேரம் செலவிட்டு, நல்லதொரு தீர்மானத்தை எடுங்கள். பெற்றோர் என்றென்றும் வாழப் போவதில்லை. அவர்கள் நம்மை அன்போடும் அக்கறையோடும் கண்ணியத்தோடும் வளர்த்தார்கள். எனவே அவர்களுடைய வயதான காலத்தில் நம்மோடு அவர்களை வைத்துக்கொண்டு, அவர்களை கண்ணியமாய் நடத்துவது நம்முடைய கடமை. பெற்றோரை மதிக்க வேண்டும், கண்ணியமாய் நடத்த வேண்டும், நன்றாய் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடைய துணைக்காக பொறுமையாக காத்திருப்பது மிகவும் நல்லது. இல்லையென்றால், உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எந்த விதத்தில் ஆசீர்வாதமாய் இருக்க நினைத்தாலும் கணவனிடத்தில் இருந்து உடனே தொல்லையும் நச்சரிப்பும் சண்டையும்தான் வரும். உங்களுடைய குடும்ப வாழ்வை உங்கள் விருப்பம் போல அமைத்துக் கொள்ளும் உரிமையை தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். கூட்டுக்குடும்பத்துக்கு நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் கிடையாது. கூட்டுக் குடும்பத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் அது உங்கள் மேல் திணிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. கூட்டுக் குடும்ப நெருக்கடியால் நீங்கள் நெருக்கத்திற்குள்ளாகி, அதன் விளைவாக உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. இருந்தாலும், பண உதவி, ஜெப உதவி, மற்றபிற உதவிகள் என வயதான காலத்தில் பெற்றோருக்கு வேண்டிய அனைத்தையும் செய்துகொடுத்து, அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள் என்கிற உணர்வை அவர்களுக்கு கொடுக்க வேண்டியது பிள்ளைகளுடைய கட்டாய கடமையாகும். பெற்றோரை நேசித்து நன்றாக கவனித்துக் கொள்ள விரும்பும் பிள்ளைகளிடத்தில் எதற்கெடுத்தாலும் பிரச்சனை பண்ணிக்கொண்டும், சண்டைப் போட்டுக் கொண்டும் இல்லாமல், பெற்றோரும் தெய்வீக ஞானத்தோடு நடந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு சலிப்பு உண்டாகும்படி எதையும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். (தயவுசெய்து வாசிக்கவும்: தீத்து 2:15; 1 தீமோத்தேயு 5:3-5, 16; கொலோசெயர் 3:21; நீதிமொழிகள் 27:15, 28:24). சிலர் தங்கள் வீட்டில் சிலவகை அரிய, விசேஷமான பறவைகள் அல்லது செல்லப்பிராணிகளை வைத்து வளர்ப்பதுண்டு. அவற்றில் சில தங்கள் எஜமான்களை விட அதிக நாட்கள் வாழும் தன்மை கொண்டவை. எனவே இன்றைய நாட்களில் சில விலங்கியல் ஆர்வலர்கள், எஜமான்களின் உயிலில் இந்த செல்லப் பிராணிகளையும் சேர்க்க வேண்டும் என்று கோருகிறார்கள். எஜமானர்களின் மறைவுக்குப் பிறகு இந்த பிராணிகள் கஷ்டப்படாமல், சொத்து யாரைச் சேருகிறதோ அவர்களிடம் இந்தப் பிராணிகளும் சேர வேண்டும் என்பது அவர்களின் வாதம், விருப்பம். நம்முடைய பெற்றோர் தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஈடு இணையற்ற விலையேறப் பெற்ற பொக்கிஷம் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. பிராணிகளுக்கே அந்த அளவுக்கு கவனிப்பு என்றால், நம்மை வளர்த்து, ஆளாக்கி, கடைசிவரை நம்மோடு வாழ விரும்பும் பெற்றோருக்கு எவ்வளவு அதிகமாய் நம்முடைய கவனிப்பு இருக்கவேண்டும்!
Day 23Day 25

About this Plan

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy