YouVersion Logo
Search Icon

லூக்கா 21

21
விதவையின் காணிக்கை
1இயேசு ஏறெடுத்துப் பார்த்தபோது, செல்வந்தர்கள் தமது காணிக்கைகளை ஆலயத்தின் காணிக்கைப் பெட்டிகளில் போடுவதைக் கண்டார். 2ஒரு ஏழை விதவை, இரண்டு சிறிய செப்பு நாணயங்களை அதிலே போடுவதையும் அவர் கண்டார். 3அப்போது அவர், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன். இந்த ஏழை விதவை, மற்றைய எல்லோரைப் பார்க்கிலும் அதிகமாய் போட்டிருக்கிறாள். 4மற்றவர்கள் எல்லோரும் தங்கள் செல்வத்திலிருந்து காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; ஆனால் இவளோ தனது ஏழ்மையிலிருந்து, தனது பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்” என்றார்.
இறுதிக் காலத்தின் அடையாளங்கள்
5அவருடைய சீடர்களில் சிலர், “ஆலயம் அழகான கற்களாலும் இறைவனுக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளினாலும் எவ்வளவாய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், 6“நீங்கள் இங்கே காண்கின்ற இவையெல்லாம், ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இல்லாதவாறு இடிக்கப்பட்டு, இவை அனைத்தும் தரைமட்டமாக்கப்படும் நாட்கள் வரும்” என்றார்.
7அவர்கள் அவரிடம், “போதகரே, இவை எப்போது நிகழும்? இவை நிகழப்போவதற்கான முன் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.
8அதற்கு அவர், “நீங்கள் ஏமாற்றப்படாதபடி எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அநேகர் ‘நான்தான் அவர்’ என்றும், ‘காலம் நெருங்கிவிட்டது’ என்றும் சொல்லிக்கொண்டு, என் பெயராலே வருவார்கள். அவர்களைப் பின்பற்ற வேண்டாம். 9நீங்கள் யுத்தங்களையும், கிளர்ச்சிகளையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்பட வேண்டாம். முதலில் இவையெல்லாம் நிகழும். ஆனாலும், முடிவு உடனே வராது” என்றார்.
10பின்பு அவர் அவர்களிடம் சொன்னதாவது: “இனத்திற்கு விரோதமாய் இனமும், இராச்சியத்துக்கு விரோதமாய் இராச்சியமும் எழும். 11பல இடங்களில் பெரும் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், ஆபத்தான நோய்களும் உண்டாகும். பயங்கரத் தோற்றங்களும், வானத்திலிருந்து மாபெரும் அடையாளங்களும் தோன்றும்.
12“ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முன்பாக, உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களை யூத மன்றாடும் ஆலயங்களிலும், சிறைகளிலும் ஒப்படைப்பார்கள். அரசர்களுக்கு முன்பாகவும், ஆளுநர்களுக்கு முன்பாகவும் கொண்டு செல்லப்படுவீர்கள். இவையெல்லாம் என் பெயரின் காரணமாக நிகழும். 13நீங்கள் அவர்களுக்கு சாட்சிகளாய் இருப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும். 14ஆனாலும், எவ்வாறு பதில் அளிக்கலாம் என்று கவலைப்படாமல் இருப்பதற்காக, உங்கள் மனதில் முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 15ஏனெனில், உங்கள் எதிரிகளில் எவனும் எதிர்த்துப் பேசவோ, மறுத்துப் பேசவோ முடியாத அளவுக்கு, வார்த்தைகளையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். 16நீங்கள் பெற்றோர்களாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும் காட்டிக் கொடுக்கப்படுவீர்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொலை செய்வார்கள். 17என் பெயரின் பொருட்டு#21:17 என் பெயரின் பொருட்டு என்பது இயேசுவைப் பின்பற்றுவதன் பொருட்டு அனைத்து மனிதரும் உங்களை வெறுப்பார்கள். 18ஆனால் உங்கள் தலையிலுள்ள ஒரு முடியும் அழிந்து போகாது. 19நீங்கள் உறுதியாய் இருப்பதால், வாழ்வை ஆதாயப்படுத்திக்கொள்வீர்கள்.
20“இராணுவத்தினர் எருசலேமைச் சுற்றிவளைத்திருப்பதை நீங்கள் காணும்போது, அதற்கு அழிவு நெருங்கிவிட்டது என அறிந்துகொள்வீர்கள். 21அவ்வேளையில், யூதேயாவில் இருக்கின்றவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும். எருசலேம் நகரத்தில் இருக்கின்றவர்கள் வெளியேறட்டும். நாட்டுப்புறங்களில் இருக்கின்றவர்கள் நகரத்துக்குள் போகாமல் இருக்கட்டும். 22ஏனெனில் எழுதப்பட்டிருப்பவை எல்லாம் நிறைவேறப் போகும் தண்டனையின் காலம் இதுவே. 23அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் ஐயோ பயங்கரமாய் இருக்கும்! தேசத்திலே கொடிய துன்பம் உண்டாகும். இந்த மக்களுக்கு எதிராக கடுங்கோபமும் வெளிப்படும். 24அவர்கள் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள். அனைத்து நாடுகளுக்கும் கைதிகளாய் கொண்டு செல்லப்படுவார்கள்; யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும் வரை, எருசலேம் யூதரல்லாதவர்களின் காலின் கீழே மிதிபடும்.
25“சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் ஏற்படும். பூமியிலோ மக்கள் கடலின் முழக்கத்தினாலும், கொந்தளிப்பினாலும், பெருந்துன்பத்திற்கும் கலக்கத்திற்கும் உட்படுவார்கள். 26வானத்தின் அதிகாரங்கள்#21:26 வானத்தின் அதிகாரங்கள் என்பது வானத்திலுள்ள இயற்கையான படைப்புகள் அசைக்கப்படுவதனால், உலகத்திற்கு என்ன ஏற்படுமோ என்று பயத்தினால், மனிதர்கள் மனம் சோர்ந்து போவார்கள். 27அவ்வேளையில் மனுமகன், வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மேகத்தில் வருவதை அவர்கள் காண்பார்கள். 28இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் உங்கள் தலைகளை நிமிர்த்தி எழுந்து நில்லுங்கள். ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
29அத்துடன், இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “அத்திமரத்தையும் மற்றைய அனைத்து மரங்களையும் நோக்கிப் பாருங்கள். 30அவை துளிர் விடும்போது, கோடைகாலம் நெருங்கிவிட்டது என்று நீங்களே பார்த்து அறிந்துகொள்கின்றீர்கள். 31அவ்வாறே, இவையெல்லாம் நிகழ்வதை நீங்கள் காணும்போது, இறைவனுடைய இராச்சியம் சமீபமாய் வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.
32“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவையெல்லாம் நடந்து முடியும் வரைக்கும், இந்தத் தலைமுறையினர் ஒழிந்து போக மாட்டார்கள். 33வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது.
34“களியாட்டத்தினாலும், மதுபோதையினாலும், வாழ்க்கைக்குரிய கவலைகளினாலும் உங்கள் இருதயங்கள் பாரமடைந்து போகாதபடி நீங்கள் கவனமாய் இருங்கள்; ஏனெனில் அந்தநாள், ஒரு கண்ணிப்பொறியைப் போல எதிர்பாராத விதத்தில் உங்கள்மீது வரும். 35பூமி முழுவதிலும் வாழ்கின்ற எல்லோர் மேலும் அது வரும். 36எப்போதும் விழிப்புடன் இருந்து, நடக்கப் போகின்ற எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்வதற்காகவும், மனுமகனுக்கு முன்பாக உங்களால் நிற்கக் கூடிய வல்லமை இருக்கவும் வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்.
37இயேசு ஒவ்வொருநாளும் ஆலயத்தில் கற்பித்தபோதும், இரவு நேரமானதும் வெளியே போய், ஒலிவ மலை எனப்பட்ட குன்றில் தங்கி வந்தார். 38ஆலயத்தில் அவர் வாய்மொழிந்தவற்றை உற்றுக்கேட்பதற்காக, அனைத்து மக்களும் அதிகாலையிலேயே எழுந்து அவரிடம் வந்தார்கள்.

Currently Selected:

லூக்கா 21: TRV

Highlight

Share

ਕਾਪੀ।

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in