யாத் 24
24
அத்தியாயம் 24
இரத்த உடன்படிக்கை உறுதிப்படுத்தப்படுதல்
1பின்பு அவர் மோசேயை நோக்கி: “நீயும் ஆரோனும், நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேர்களும் கர்த்தரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து தொழுதுகொள்ளுங்கள். 2மோசே மட்டும் யெகோவாவுக்கு அருகில் வரலாம்; மற்றவர்கள் அருகில் வரக்கூடாது; மக்கள் அவனுடன் ஏறிவரவேண்டாம்” என்றார். 3மோசே வந்து, யெகோவாவுடைய வார்த்தைகள் யாவையும் நீதி சட்டங்கள் யாவையும் மக்களுக்கு அறிவித்தான்; “அப்பொழுது மக்கள் எல்லோரும் ஒரேசத்தமாக: யெகோவா அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்” என்று மறுமொழி சொன்னார்கள். 4மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலையில் எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படி பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். 5இஸ்ரவேலின் வாலிபர்களை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். 6அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, கிண்ணங்களில் ஊற்றி, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, 7உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து, மக்களின் காதுகளில் கேட்க வாசித்தான்; அவர்கள் யெகோவா சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்” என்றார்கள். 8அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, மக்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும்குறித்து யெகோவா உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான்.
9பின்பு மோசேயும், ஆரோனும், நாதாபும் அபியூவும், இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எழுபதுபேர்களும் மலைக்கு ஏறிப்போய், 10இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழுள்ள இடமானது இழைத்த வேலைப்பாடு மிகுந்த நீலக்கல்லைப்போல தெளிந்த வானத்தின் சுடரொளிக்கு ஒப்பாகவும் இருந்தது. 11அவர் இஸ்ரவேலர்களுடைய தலைவர்கள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு சாப்பிட்டுக் குடித்தார்கள்.
12அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன்” என்றார். 13அப்பொழுது மோசே தன்னுடைய ஊழியக்காரனாகிய யோசுவாவோடு எழுந்து போனான். மோசே தேவனுடைய மலையில் ஏறிப்போகும்போது, 14அவன் மூப்பர்களை நோக்கி: “நாங்கள் உங்களிடம் திரும்பிவரும்வரை, நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும், ஊரும் உங்களிடம் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு ஏதாவது பிரச்சனை உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம்” என்றான். 15மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடியது. 16யெகோவாவுடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாட்கள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். 17மலையின் உச்சியிலே யெகோவாவுடைய மகிமையின் காட்சி இஸ்ரவேலர்களுடைய கண்களுக்கு சுட்டெரிக்கிற அக்கினியைப்போல் இருந்தது. 18மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான்.
Voafantina amin'izao fotoana izao:
யாத் 24: IRVTam
Asongadina
Dika mitovy
Mampitaha
Hizara
Tianao hovoatahiry amin'ireo fitaovana ampiasainao rehetra ve ireo nasongadina? Hisoratra na Hiditra
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.