யாத்திராகமம் 38
38
தகனபலிபீடம்
1அதன் பின்னர், பெசலெயேல் சித்தீம் மரத்தினால் மூன்று முழம்#38:1 மூன்று முழம் – சுமார் 4 1/2 அடி அல்லது 1.4 மீற்றர் உயரமான தகனபலிபீடத்தைச் செய்தான். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமும் உள்ள சதுரமாய் இருந்தது. 2அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பை வைத்து, பீடத்தோடு ஒரே அமைப்பாய் இருக்கும்படி அவற்றை அமைத்து, அப்பீடத்தை வெண்கலத் தகட்டால் மூடினான். 3அந்தப் பலிபீடத்துக்குத் தேவையான பானைகள், வாரிகள், தெளிக்கும் கிண்ணங்கள், இறைச்சி எடுக்கும் முட்கரண்டிகள், நெருப்புச் சட்டிகள் ஆகிய பாத்திரங்களையெல்லாம் வெண்கலத்தால் செய்தான். 4அதற்கு வெண்கல வலைக் கம்பிச் சல்லடையைச் செய்து, அதை அதன் விளிம்புக்குக் கீழே, பீடத்தின் உள்ளே அதன் பாதி உயரத்தில் இருக்கும்படி வைத்தான். 5அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும், தடிகள் கொழுவுவதற்கு நான்கு வெண்கல வளையங்களைப் பொருத்தினான். 6தடிகளை சித்தீம் மரத்தினால் செய்து, அவற்றை வெண்கலத் தகட்டால் மூடினான். 7அந்தத் தடிகள் பீடத்தை சுமப்பதற்காக இரு பக்கங்களிலும் இருக்கும்படி அவற்றைக் கொழுவினான். அந்த பீடம் நான்கு பக்கமும் பலகையால் செய்யப்பட்டிருந்தது. அதன் உட்புறம் உள்ளீடு அற்று வெறுமையாய் இருந்தது.
கழுவுவதற்குத் தொட்டி
8அவன் வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும், இறைபிரசன்னக் கூடாரத்தின் வாசலில் கூடிநின்று பணி செய்த பெண்கள் வழங்கிய கண்ணாடிகளினால் செய்தான்#38:8 பெண்கள் முகம் பார்க்கும் கண்ணாடியாக வெண்கலத்தைப் பயன்படுத்தினர்.
முற்றம்
9அதன் பின்னர் அவன் முற்றத்தை அமைத்தான். அது தெற்குப் பக்கம் நூறு முழம்#38:9 நூறு முழம் – சுமார் 150 அடி அல்லது 45 மீற்றர் நீளமுடையதாய் இருந்தது. அதற்கு திரிக்கப்பட்ட மென்பட்டினாலான திரைகள் நெய்யப்பட்டிருந்தன. 10அந்தத் திரைகளைத் தொங்க வைப்பதற்கு இருபது தூண்களும், அதற்கு இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றுக்கு வெள்ளிக் கொழுக்கிகளும், பட்டிகளும் இருந்தன. 11அதன் வடக்குப் பக்கமும் நூறு முழம் நீளமுடையதாயிருந்தது. அதற்கும் திரைகள் இருந்ததால், இருபது தூண்களும், இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றுக்கும் வெள்ளிக் கொழுக்கிகளும், பட்டிகளும் இருந்தன.
12முற்றத்தின் மேற்கு பக்க முனையில் இருந்த திரைகள் ஐம்பது முழம்#38:12 ஐம்பது முழம் – சுமார் 75 அடி அல்லது 23 மீற்றர் அகலமாய் இருந்தது. அவற்றைத் தொங்க விடுவதற்காக பத்து தூண்களும், பத்து அடித்தளங்களும், வெள்ளியினால் செய்யப்பட்ட கொழுக்கிகளும், கம்பங்களில் பட்டிகளும் இருந்தன. 13கிழக்கு பக்கம் நோக்கிய அதன் முனை ஐம்பது முழம் அகலமாயிருந்தது. 14வாசலின் ஒரு பக்கத்துக்கு பதினைந்து முழம்#38:14 பதினைந்து முழம் – சுமார் 22 அடி அல்லது 6.8 மீற்றர் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்க விடுவதற்கான மூன்று தூண்களும், மூன்று அடித்தளங்களும் இருந்தன. 15மறுபுறத்திலும் பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்க விடுவதற்கு மூன்று தூண்களும் மூன்று அடித்தளங்களும் இருந்தன. 16முற்றத்தைச் சுற்றிவர இருந்த திரைகளெல்லாம் திரிக்கப்பட்ட மென்பட்டு நூலால் நெய்யப்பட்டிருந்தன. 17அங்கிருந்த எல்லாத் தூண்களின் அடித்தளங்களும் வெண்கலத்தாலும், அத் தூண்களினது கொழுக்கிகளும் பட்டிகளும் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகள் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன. இவ்வாறு முற்றத்தின் எல்லாத் தூண்களும் வெள்ளிப் பட்டிகள் உடையனவாய் இருந்தன.
18முற்றத்தின் வாசலுக்குப் போடப்பட்ட திரையானது நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரிக்கப்பட்ட மென்பட்டு துணியினால் நெய்யப்பட்டு ஊசியால் செய்யப்பட்ட பூத் தையல் வேலையாய் இருந்தது. அது இருபது முழம்#38:18 இருபது முழம் – சுமார் 30 அடி அல்லது 9 மீற்றர் நீளமும், முற்றத்தின் திரைகளைப் போல் ஐந்து முழம்#38:18 ஐந்து முழம் – சுமார் 7 1/2 அடி அல்லது 2.3 மீற்றர் உயரமும் உடையதாய் இருந்தது. 19அதைத் தொங்க விடுவதற்கு நான்கு தூண்களும், நான்கு வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றின் கொழுக்கிகளும், பட்டிகளும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகளும் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன. 20இறைபிரசன்னக் கூடாரத்தையும், அதன் முற்றத்தையும் சுற்றியிருந்த கூடார ஆப்புகள் வெண்கலத்தினால் செய்யப்பட்டிருந்தன.
உபயோகிக்கப்பட்ட பொருட்கள்
21சாட்சிக் கூடாரமான இறைபிரசன்னக் கூடாரத்தை அமைக்கும் வேலைகளுக்கென உபயோகிக்கப்பட்ட பொருட்களின் தொகைகள் இவைகளே: அவை மோசேயின் கட்டளைப்படி, மதகுரு ஆரோனின் மகன் இத்தாமாரின் மேற்பார்வையின் கீழ் லேவியர்களால் பதிவு செய்யப்பட்டிருந்தன. 22யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் செய்தான். 23தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகன் அகோலியாபும் அவனோடு இருந்தான். அவன் கைவினைஞனும், வடிவமைப்பாளனும், நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரிக்கப்பட்ட மென்பட்டு துணியினால் பூத் தையல் வேலை செய்பனுமாயிருந்தான். 24பரிசுத்த இடத்தின் அனைத்து வேலைக்குமென்று, அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்தத் தொகை, பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருபத்தொன்பது தாலந்துகளும்#38:24 இருபத்தொன்பது தாலந்து – சுமார் 991 கிலோ கிராம். எழுநூற்று முப்பது சேக்கலுமாயிருந்தது#38:24 எழுநூற்று முப்பது சேக்கலுமாயிருந்தது – சுமார் 9 கிலோ கிராம்..
25குடிசன மதிப்பீட்டின்போது, எண்ணிக் கணக்கிடப்பட்ட மக்கள் சமூகத்திலிருந்து பெறப்பட்ட வெள்ளி, பரிசுத்த இடத்தின் நிறையின்படி நூறு தாலந்துகளும்#38:25 நூறு தாலந்துகளும் – சுமார் 3 3/4 தொன் அல்லது 3.4 மெட்ரிக் தொன், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலுமாயிருந்தது#38:25 ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலுமாயிருந்தது – சுமார் 44 ராத்தல் அல்லது 20 கிலோ கிராம். வசனம் 28 இலும் உள்ளது. 26இருபது வயது, மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எண்ணிக் கணக்கிடப்பட்டு அவர்கள் கடந்து செல்லும்போது, ஒவ்வொருவரிடமிருந்தும் ஆளுக்கு ஒரு பெக்கா வசூலிக்கப்பட்டது. ஒரு பேக்கா என்பது பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி அரைச் சேக்கலாகும்#38:26 அரைச் சேக்கலாகும் – சுமார் 1/4 அவுன்ஸ் அல்லது 5.7 கிராம். எண்ணிக் கணக்கிடப்பட்ட மனிதர்களின் மொத்தத் தொகை 603,550. 27கொடுக்கப்பட்ட அந்த நூறு தாலந்து வெள்ளியும் பரிசுத்த இடத்துக்கான அடித்தளங்களையும், திரைக்கான அடித்தளங்களையும் அமைப்பதற்கு உபயோகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அடித்தளத்துக்கும் ஒரு அடித்தளத்துக்கு ஒரு தாலந்து#38:27 ஒரு தாலந்து – சுமார் 34 கிலோ கிராம் என்ற கணக்கின்படி நூறு அடித்தளங்களுக்கு நூறு தாலந்துகள் உபயோகிக்கப்பட்டன. 28அவன் ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் வெள்ளியை#38:28 ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் வெள்ளியை – சுமார் 30 கிலோ கிராம் தூண்களுக்கான கொழுக்கிகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான மேற்பரப்பைத் தகட்டால் மூடுவதற்கும், தூண்களுக்கான பட்டிகளைச் செய்வதற்கும் உபயோகித்தான்.
29அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பெறப்பட்ட வெண்கலத்தின் அளவு எழுபது தாலந்துகளும்#38:29 எழுபது தாலந்துகளும் – சுமார் 2.425 மெட்ரிக் தொன், இரண்டாயிரத்து நானூறு சேக்கலுமாகும்.#38:29 இரண்டாயிரத்து நானூறு சேக்கலுமாகும் – சுமார் 28 கிலோ கிராம் 30அந்த வெண்கலத்தை இறைபிரசன்னக் கூடாரத்தின் நுழைவு வாசலின் அடித்தளங்களையும், வெண்கலபீடத்தையும், அதற்கான வெண்கலச் சல்லடையையும், பீடத்துக்குரிய எல்லாப் பாத்திரங்களையும் செய்ய உபயோகித்தான். 31அத்துடன் முற்றத்தைச் சுற்றி இருந்த அடித்தளங்களையும், வாசலின் அடித்தளத்தையும், இறைபிரசன்னக் கூடாரத்துக்கும் அதைச் சுற்றியிருந்த முற்றத்துக்குமான கூடார ஆப்புகளையும் செய்ய உபயோகித்தான்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
யாத்திராகமம் 38: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.