ஆதியாகமம் 23

23
சாராளின் மரணம்
1சாராள் நூற்று இருபத்தேழு வயது வரை உயிரோடிருந்தாள். 2அவள் கானானில் இருந்த எப்ரோன் என்று அழைக்கப்பட்ட, கீரியாத்-அர்பா என்னும் ஊரில் மரணித்தாள்; அப்போது ஆபிரகாம் சாராளுக்காகத் துக்கம் அனுஷ்டித்து அழுது புலம்பச் சென்றார்.
3அதன் பின்னர் ஆபிரகாம், மரணித்த தன் மனைவியின் அருகிலிருந்து எழுந்து சென்று, ஏத்தின் சந்ததியினருடன்#23:3 ஏத்தின் சந்ததியினருடன் – சில மொழிபெயர்ப்புகள் இதை ஏத்தியருடன் என்று மொழிபெயர்த்துள்ளன. பேசினார். அவர் அவர்களிடம், 4“நான் இங்கு உங்கள் மத்தியில் அந்நியனும், நாடற்றவனுமாய் இருக்கின்றேன். நான் பிரேதத்தை என் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தும்படி, உங்களுடைய நிலத்தில் புதைப்பதற்கான ஒரு காணியை தயவாக விலைக்குத்#23:4 எபிரேய மொழியில் தயவாக தாருங்கள் என்றுள்ளது. தருவீர்களாக” என்று கேட்டார்.
5அதற்கு ஏத்திய மக்கள் ஆபிரகாமிடம், 6“ஆண்டவனே, நாங்கள் தருவதை ஏற்றுக்கொள்வீராக. நீர் எங்கள் மத்தியில் வல்லமையுள்ள தலைவராய் இருக்கின்றீர். நீர் விரும்பும் சிறந்த கல்லறை ஒன்றை தெரிவுசெய்து, பிரேதத்தை அதில் அடக்கம் செய்வீராக. நீர் அடக்கம் செய்வதற்கு தன்னுடைய கல்லறையைத் தருவதற்கு ஒருவனும் மறுப்புத் தெரிவிக்கப் போவதில்லை” என்றார்கள்.
7அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்த நாட்டு மக்களான ஏத்தியருக்கு முன்பாகத் தலை வணங்கினார். 8அவர் அவர்களிடம், “உங்களுடைய நிலத்தில் பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு நீங்கள் சம்மதம் தெரிவிப்பதனால், என்னுடைய வேண்டுகோளைத் தயவாகக் கேளுங்கள். என் சார்பாக சோகாரின் மகன் எப்ரோனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். 9அவனுடைய காணியின் எல்லையில் உள்ள, அவனுக்குச் சொந்தமான மக்பேலா என்ற குகையை தயவாக எனக்கு விலைக்குத் தரச் சொல்வீர்களாக. எனக்குரிய அடக்கக் கல்லறையாக இருக்கும்படி, அதன் முழுப் பெறுமதியின்படி அதை எனக்கு உங்கள் மத்தியில் விற்கும்படி கேளுங்கள்” என்றார்.
10அப்போது எப்ரோன், ஏத்தியரான தன் மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தான்; ஏத்தியனாகிய எப்ரோன், பட்டண வாயிலுக்கு வந்திருந்த ஏத்தியர் அனைவரும் கேட்கத்தக்கதாக ஆபிரகாமுக்குப் பதிலளித்து, 11“வேண்டாம் என் ஆண்டவனே, நான் அதை விலையின்றி தருகின்றேன், நீர் அதை ஏற்றுக்கொள்வீராக. நீர் விரும்பிய காணியையும், அதனுடன் அதிலுள்ள குகையையும் தருகின்றேன். என் மக்கள் முன்னிலையில் அவற்றை உமக்குச் சொந்தமாகத் தருகின்றேன். உமக்குரியவளின் பிரேதத்தை அங்கே அடக்கம் செய்வீராக” என்றான்.
12ஆபிரகாம் அந்நாட்டு மக்களுக்கு வணக்கம் செலுத்தி, 13அவர்கள் கேட்கும்படியாக எப்ரோனிடம், “இல்லை, நான் சொல்வதைத் தயவாகக் கேட்பீராக, நிலத்துக்குரிய விலைமதிப்பை நான் உமக்குத் தருகின்றேன், நான் பிரேதத்தை அடக்கம் செய்யும்படி அதை என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வீராக” என்றார்.
14அதற்கு எப்ரோன் ஆபிரகாமிடம், 15“என் ஆண்டவனே, நான் தருகின்றதை ஏற்றுக்கொள்வீராக; அந்தக் காணி நானூறு சேக்கல் வெள்ளி#23:15 நானூறு சேக்கல் வெள்ளி – சுமார் 4.6 கிலோ கிராம் வெள்ளி. இது அளவுக்கதிக விலை. பெறுமதியுடையது. ஆனால் எனக்கும் உமக்கும் இடையில் அது எம்மாத்திரம்? நீர் உம்மிடத்திலிருக்கும் உமது மனைவியின் பிரேதத்தை இந்தக் காணியில் அடக்கம் செய்யும்” என்றான்.
16கூடியிருந்த ஏத்தியர்கள் எல்லோருக்கும் கேட்கத்தக்கதாக எப்ரோன் கேட்டுக்கொண்ட விலையை ஆபிரகாம் ஏற்றுக்கொண்டார். அவர் அக்கால வழக்கிலிருந்த வணிகர்களின் எடையின்படி, நானூறு சேக்கல் வெள்ளியை நிறுத்து அவனுக்குக் கொடுத்தார்.
17இவ்வாறு மம்ரேக்கு அருகே மக்பேலாவிலுள்ள எப்ரோனின் காணி, அதாவது காணியும் அதிலுள்ள குகையும், அதன் எல்லைகளுக்குட்பட்ட மரங்களும் விற்கப்பட்டன. 18அது ஆபிரகாமின் சொத்தாக, பட்டணத்தின் வாயிலில் கூடிவந்த அனைத்து ஏத்தியருக்கு முன்பாகவும் காணியுறுதி செய்யப்பட்டது. 19அதற்குப் பின்னர் ஆபிரகாம் கானான் நாட்டில், எப்ரோன் என்றும் அழைக்கப்பட்டதான மம்ரேக்கு அருகே, மக்பேலா எனும் காணியில் உள்ள குகையில் தன் மனைவி சாராளை அடக்கம் செய்தார். 20இவ்வாறு அந்தக் காணியும், அதிலுள்ள குகையும் ஆபிரகாமுக்குச் சொந்தமான அடக்கம் செய்யும் நிலமாக ஏத்தியரால் காணியுறுதி செய்யப்பட்டது.

Áherslumerki

Deildu

Afrita

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in