ஆதியாகமம் 21

21
ஈசாக்கின் பிறப்பு
1கர்த்தர் தாம் முன்னர் கூறியபடி, சாராளைச் சந்திக்க தயவுடன் வந்தார், கர்த்தர் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். 2ஆபிரகாமின் முதிர்வயதில் சாராள் கர்ப்பவதியாகி, இறைவன் வாக்குறுதி வழங்கியிருந்த அந்த குறித்த காலத்தில், ஆபிரகாமுக்கு#21:2 எபிரேய மொழியில் அவருக்கு என்றுள்ளது. ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 3ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்றெடுத்த மகனுக்கு ஈசாக்கு எனப் பெயர் சூட்டினார். 4தன்னுடைய மகன் ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில், இறைவன் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்தார். 5ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பிறந்தபோது, அவர் நூறு வயதுடையவராய் இருந்தார்.
6அப்போது சாராள்,
“என்னை மகிழ்வுடன் சிரிக்க வைத்தார் இறைவன்,
இதைக் கேட்கும் யாவரும்,
என்னுடன் சேர்ந்து மகிழ்வுடன் சிரிப்பார்கள்”
என்றாள்.
7மேலும் அவள், “சாராளும் பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாலூட்டுவாள் என்று ஆபிரகாமுக்கு யார் கூறியிருப்பார்கள்? அவ்வாறிருந்தும் அவரது முதிர்வயதில் நான் அவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தேன்” என்றாள்.
ஆகாரும் இஸ்மவேலும்
8அந்தக் குழந்தை வளர்ந்து பால் மறந்தது. ஈசாக்கு பால் குடிப்பதை மறந்த நாளன்று, ஆபிரகாம் ஒரு பெரிய கொண்டாட்ட விருந்தை ஏற்பாடு செய்தார். 9ஆனாலும், எகிப்தியப் பெண்ணான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகனானவன், சிரித்துக் கேலி செய்வதை சாராள் கண்டாள். 10அப்போது அவள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே துரத்திவிடும்; இந்த அடிமைப் பெண்ணின் மகனுக்கு என் மகன் ஈசாக்கின் சொத்துரிமையில் பங்கில்லை” என்றாள்.
11தன்னுடைய மகன் இஸ்மவேலைக்#21:11 இஸ்மவேலை – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. குறித்து இவ்வாறு சொல்லப்பட்டதால், ஆபிரகாம் இது முறையற்றதென்று மனம் வருந்தினார். 12அப்போது ஆபிரகாமிடம் இறைவன், “அந்தச் சிறுவனையும், உன் பணிப்பெண்ணையும் குறித்து இது முறையற்றது என மனம் வருந்த வேண்டாம். சாராள் சொல்வதை எல்லாம் கேள், ஏனெனில் ஈசாக்கின் ஊடாக வருவோரே உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படுவார்கள். 13பணிப்பெண்ணின் மகனும் உன் சந்ததியானபடியால், அவனையும் ஒரு இனமாக்குவேன்” என்றார்.
14மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் உணவையும், ஒரு தோற்பையில் தண்ணீரையும் எடுத்து, அவற்றை ஆகாருடைய தோளின்மீது வைத்து, மகனை அவளிடம் கையளித்து, அவளை அங்கிருந்து வெளியேற்றினார். அவள் தன் வழியே போய் பெயெர்செபாவின் பாலைநிலத்தில் அலைந்து திரிந்தாள்.
15தோற்பையில் இருந்த தண்ணீர் முடிவடைந்ததும், அங்கிருந்த புதர்ச் செடிகளில் ஒன்றின் கீழ் அவள் தன் மகனைக் கைவிட்டாள். 16பின்னர் அவள் அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு அம்பு பாயும் தூரத்தில்#21:16 சுமார் 100 அடி தூரம். போய் உட்கார்ந்து, “மகன் மரணிப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று கூறி, அவள்#21:16 எபிரேய மொழியில் பிள்ளை என்றுள்ளது. சத்தமிட்டு அழத் தொடங்கினாள்.
17சிறுவன் அழுகின்ற சத்தத்தை இறைவன் கேட்டார். இறைவனின் தூதன் வானத்திலிருந்து ஆகாரை அழைத்து, “ஆகாரே, நடந்தது என்ன? பயப்படாதே, ஏனெனில் சிறுவன் இருக்குமிடத்திலிருந்து அவன் அழுகின்ற சத்தத்தை இறைவன் கேட்டார். 18இதோ, சிறுவனைத் தூக்கியெழுப்பி, அவனுக்கு உறுதுணை#21:18 எபிரேய மொழியில் கையில் பிடித்துக்கொண்டு போ என்றுள்ளது. அளித்துச் செல்வாயாக. நான், அவனை ஒரு பெரிய இனமாக்குவேன்” என்றார்.
19பின்பு இறைவன் அவளுடைய கண்களைத் திறந்ததால், அங்கே தண்ணீருள்ள ஒரு கிணற்றைக் கண்டாள். அவள் அதிலிருந்த நீரை தோற்பையில் நிரப்பி தன் மகனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
20சிறுவன் வளரும்போது இறைவன் அவனுடன் இருந்தார். அவன் பாலைநிலத்தில் வசித்து, வில் வீரனானான். 21இஸ்மவேல் பாரான் எனப்பட்ட பாலைநிலத்தில் குடியிருக்கையில், அவனுடைய தாய் அவனுக்கு ஒரு எகிப்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தாள்.
ஆபிரகாம் அபிமெலேக்குடன் ஒப்பந்தம்
22அக்காலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தளபதி பிகோலும் ஆபிரகாமிடம், “நீர் செய்யும் எல்லாவற்றிலும் இறைவன் உம்முடனே இருக்கின்றார். 23ஆகையால் நீர் எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ, எனது சந்ததிகளுக்கோ எவ்விதத் தீங்கும் செய்ய மாட்டேன் என்று இறைவனுக்கு முன்பாக எனக்கு சத்தியம் செய்திடுவீராக. நான் உமக்குத் தயவு காண்பித்தது போல, எனக்கும், நீர் தற்காலிகமாக குடியிருக்கின்ற இந்த நாட்டுக்கும் எப்பொழுதும் தயவு காட்டும்” என்றான்.
24அதற்கு ஆபிரகாம், “அவ்வாறே சத்தியம் செய்கின்றேன்” என்றார்.
25அதன் பின்னர், அபிமெலேக்கின் பணியாளர் கைப்பற்றியிருந்த ஆபிரகாமுக்குச் சொந்தமான கிணற்றைக் குறித்து, ஆபிரகாம் அபிமெலேக்கிடம் தர்க்கித்து முறையிட்டார். 26அதற்கு அபிமெலேக்கு, “இதைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீர் எனக்கு இதை அறிவிக்கவில்லை; இன்றுவரை நான் இதைப்பற்றிக் கேள்விப்படவில்லை” என்றான்.
27அப்போது ஆபிரகாம், செம்மறியாடுகளையும் மாடுகளையும் கொண்டுவந்து, அபிமெலேக்குக்கு கொடுத்தான். அவர்கள் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். 28ஆபிரகாம் ஏழு பெண்செம்மறியாட்டுக்குட்டிகளை மந்தையிலிருந்து பிரித்தெடுத்தார். 29அப்போது அபிமெலேக்கு, “இந்த ஏழு பெண்செம்மறியாட்டுக்குட்டிகளையும் பிரித்து வைப்பதன் பொருள் என்ன?” என்று ஆபிரகாமைக் கேட்டான்.
30அதற்கு ஆபிரகாம், “நானே இந்தக் கிணற்றை வெட்டினேன் என்பதற்குச் சாட்சியாக, நீர் இந்த ஏழு பெண்செம்மறியாட்டுக்குட்டிகளையும் என்னிடமிருந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
31அவர்கள் இருவரும் அந்த இடத்தில் சத்தியம் செய்துகொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா#21:31 பெயெர்செபா என்றால் ஏழு கிணறுகள் அல்லது உறுதிமொழியின் கிணறு என்று பொருள். என்று அழைக்கப்பட்டது.
32பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்த பின்னர், அபிமெலேக்கும் அவன் படைத்தளபதி பிகோலும், எழுந்து பெலிஸ்திய நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள். 33ஆபிரகாம் பெயெர்செபாவிலே தமரிஸ்கு மரத்தை நடுகை செய்து, அங்கே நித்திய இறைவனான கர்த்தருடைய பெயரை அறிவித்து வழிபட்டார். 34ஆபிரகாம் பெலிஸ்தியருடைய நாட்டில் அநேக நாட்கள் தங்கியிருந்தார்.

Áherslumerki

Deildu

Afrita

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in