YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 2

2
ஞானிகளின் வருகை
1யூதேயாவிலுள்ள பெத்லகேம் நகரில் இயேசு பிறந்தார். அவர் ஏரோது மன்னன் காலத்தில் பிறந்தார். அதன் பின்பு இயேசு பிறந்தவுடன், சில ஞானிகள் எருசலேமுக்குக் கிழக்கிலிருந்து வந்தனர். 2அவர்கள் மக்களைப் பார்த்து, “புதிதாகப் பிறந்த யூதர்களின் ராஜாவான குழந்தை எங்கே? அவர் பிறந்துள்ளதை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம். கிழக்கு திசையில் அந்நட்சத்திரம் மேலெழுவதைக் கண்டோம். நாங்கள் அவரை வணங்க வந்துள்ளோம்” என்று சொன்னார்கள்.
3ஏரோது மன்னன் யூதர்களின் இப்புதிய அரசரைப்பற்றிக் கேள்வியுற்றான். அதைக் கேட்டு ஏரோது மன்னனும் எருசலேம் மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர். 4ஏரோது தலைமை ஆசாரியர் மற்றும் வேதபாரகரின் கூட்டத்தைக் கூட்டினான். கிறிஸ்து எங்கே பிறந்திருப்பார் என அவர்களைக் கேட்டான். 5அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். ஏனெனில்,
6“‘யூதேயாவிலுள்ள பெத்லகேமே,
உனக்கு யூதேயாவின் ஆட்சியாளர்களுக்கிடையில் முக்கியத்துவம் உண்டு.
ஆம், உன்னிலிருந்து ஒரு பிரபு தோன்றுவார்.
அவர் இஸ்ரவேல் என்னும் என் மக்களை வழி நடத்துவார்’ #மீகா 5:2
என்று தீர்க்கதரிசி வேத வாக்கியங்களில் எழுதியுள்ளார்” என்று கூறினார்கள்.
7பின், கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுடன் ஏரோது இரகசியமாகப் பேசி அவர்கள் முதன் முதலில் நட்சத்திரத்தைக் கண்ட காலத்தை அவர்களிடமிருந்து அறிந்தான். 8ஏரோது அந்த ஞானிகளிடம், “நீங்கள் சென்று அந்தக் குழந்தையைக் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் அக்குழந்தையைக் கண்டதும் என்னிடம் வந்து சொல்லுங்கள். பின் நானும் சென்று அக்குழந்தையை வணங்க இயலும்” என்று கூறி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
9மன்னன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஞானிகள் அங்கிருந்து செல்லும்போது அவர்கள் கிழக்கில் தாங்கள் கண்ட அதே நட்சத்திரத்தை மீண்டும் பார்த்தனர். ஞானிகள் அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். நட்சத்திரம் அவர்களுக்கு முன்னாலேயே சென்று குழந்தை பிறந்த இடத்திற்கு மேலாக வந்து நின்றது. 10நட்சத்திரத்தைக் கண்ட ஞானிகள் மிகவும் மகிழ்ந்தனர்.
11குழந்தை இருந்த வீட்டிற்கு ஞானிகள் வந்தனர். அவர்கள் குழந்தையை அதன் தாய் மரியாளுடன் பார்த்தனர். ஞானிகள் குழந்தையைத் தாழவிழுந்து வணங்கினர். குழந்தைக்காகத் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்து வைத்தனர். அவர்கள் தங்கத்தாலான பொருட்களையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளம் முதலான வாசனைப் பொருட்களையும் கொடுத்தனர். 12அதன் பின்னர் தேவன் ஞானிகளின் கனவில் தோன்றி அவர்களை ஏரோது மன்னனிடம் திரும்பிச் செல்ல வேண்டாம் என எச்சரித்தார். எனவே, ஞானிகள் வேறு வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.
எகிப்திற்குத் தப்பிச் செல்லுதல்
13ஞானிகள் சென்றபின், யோசேப்பின் கனவில் ஒரு தேவதூதன் தோன்றி, “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பிச்செல். ஏரோது குழந்தையைத் தேடத் தொடங்குவான். ஏரோது குழந்தையைக் கொல்ல விரும்புகிறான். எனவே, நான் சொல்லுகிறவரைக்கும் எகிப்தில் தங்கியிரு” என்று சொன்னான்.
14எனவே யோசேப்பு விழித்தெழுந்து குழந்தையுடனும் அதன் தாயுடனும் இரவிலே எகிப்துக்குப் புறப்பட்டான். 15ஏரோது மரிக்கும்வரையில் அவர்கள் எகிப்தில் தங்கியிருந்தனர். “எகிப்திலிருந்து என் குமாரனை வெளியே வரவழைத்தேன்” #ஓசி. 11:1 என்று தீர்க்கதரிசியின் வழியாக தேவன் சொல்லியதின் நிறைவேறுதலாக இது நடந்தேறியது.
பெத்லகேமின் ஆண் குழந்தைகளைக் கொல்லுதல்
16ஞானிகள் தன்னைச் சந்திக்காமல் சென்றுவிட்டதை அறிந்த ஏரோது மிகுந்த கோபமுற்றான். குழந்தை பிறந்த காலத்தை ஏரோது ஞானிகளிடமிருந்து அறிந்திருந்தான். இதற்குள் இரண்டு வருடங்களாகி இருந்தன. எனவே, பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல ஏரோது ஆணையிட்டான். ஆகவே, இரண்டும் அதற்குக் குறைவான வயதுடையதுமாகிய எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட ஆணையிட்டான். 17தீர்க்கதரிசி எரேமியாவின் மூலமாக தேவன் கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறியது.
18“ராமாவிலே ஒரு குரல் கேட்டது.
துக்கத்தின் மிகுதியில் வந்த கதறல் அது.
தன் குழந்தைகளுக்காக அழுகிறாள், ராகேல்.
அவளைத் தேற்ற முடியாது,
ஏனெனில் அவளது குழந்தைகள் இறந்துவிட்டன.” #எரே. 31:15
எகிப்தில் இருந்து திரும்புதல்
19ஏரோது இறந்தபின், யோசேப்பின் கனவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் தோன்றினான். இது யோசேப்பு எகிப்தில் இருக்கும்போது நடந்தது. 20தூதன் அவனிடம், “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு இஸ்ரவேலுக்குச் செல். ஏனெனில் குழந்தையைக் கொல்ல முயன்றவர்கள் இப்பொழுது இறந்துவிட்டனர்” என்றான்.
21ஆகவே, யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு இஸ்ரவேல் சென்றான். 22அப்பொழுது யூதேயாவின் மன்னனாக அர்கெலாயு இருந்தான் என்பதை யோசேப்பு கேள்வியுற்றான். தன் தந்தை ஏரோது இறந்தபின் அர்கெலாயு யூதேயாவின் மன்னனானான். இவ்வாறு, யூதேயாவுக்குச் செல்ல யோசேப்பு தயங்கினான். யோசேப்பு கனவில் எச்சரிப்படைந்து அங்கிருந்து கலிலேயா பகுதிக்குச் சென்றான். 23யோசேப்பு நாசரேத் என்னும் நகருக்குச் சென்று அங்கு வசித்தான். எனவே தேவன் தீர்க்கதரிசிகள் வாயிலாக “கிறிஸ்து நசரேயன்#2:23 நசரேயன் நாசரேத் என்ற நகரத்தவன், “கிளை” என்ற பொருள் தரும் பெயர். ஏசா. 11:1. என்று அழைக்கப்படுவார்” என சொன்னது நடந்தேறியது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy