YouVersion Logo
Search Icon

செப்பனியா 1

1
1 அதிகாரம்
1ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
2தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூட கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
5வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,
6 கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
7 கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
8 கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.
9வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.
10அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
11மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.
12அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.
13அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.
14 கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.
15அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.
16அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.
17மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.
18 கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy