மாற்கு 15:26-47
மாற்கு 15:26-47 TAOVBSI
அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள். அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை. நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள். ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான். இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள். ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது, கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான். அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
Free Reading Plans and Devotionals related to மாற்கு 15:26-47