YouVersion Logo
Search Icon

யோவான் 9:1-12

யோவான் 9:1-12 TAOVBSI

அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான். அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான். அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான். அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy