மல்கியா 3
3
1“பாருங்கள், நான் என் தூதுவனை அனுப்புவேன், அவன் எனக்கு முன்பாக எனக்கு ஒரு வழியை ஆயத்தம் செய்வான்; நீங்கள் தேடுகிற யெகோவா தம்முடைய ஆலயத்திற்கு திடீரென வருவார்; நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின், தூதுவனானவர் வருவார்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
2ஆனால் அவர் வரும் நாளைச் சகிக்க யாரால் முடியும்? அவர் தோன்றுகையில் அவர்முன் யாரால் நிற்கமுடியும்? ஏனெனில் அவர் கொல்லனின் நெருப்பைப்போல் இருப்பார், துணிதுவைப்போரின் சலவைக்கட்டியைப்போலவும் இருப்பார். 3அவர் வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரிக்கிற கொல்லனைப்போல் உட்கார்ந்து, லேவியின் மக்களைச் சுத்தமாக்குவார்; அவர் தங்கத்தைப்போலவும், வெள்ளியைப்போலவும் அவர்களைச் சுத்திகரிப்பார். அப்பொழுது யெகோவாவுக்கு நீதியுடன் தங்கள் காணிக்கையை கொண்டுவரும் மனிதர்கள் இருப்பார்கள். 4எனவே சென்ற நாட்களிலும், முந்திய வருடங்களிலும் நடந்ததுபோல, யூதாவின் காணிக்கைகளும் எருசலேமின் காணிக்கைகளும் யெகோவாவுக்கு பிரியமானவைகளாயிருக்கும்.
5“அப்பொழுது நியாயந்தீர்க்கும்படி நான் உங்கள் மத்தியில் வருவேன். சூனியக்காரருக்கும், விபசாரிகளுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும் எதிராக சாட்சி சொல்வேன், எனக்குப் பயப்படாமல் வேலையாட்களுக்குக் கூலி கொடுக்காது ஏமாற்றுகிறவர்களுக்கும், விதவைகளையும் தந்தையற்றவர்களையும் ஒடுக்குகிறவர்களுக்கும், அயல்நாட்டினரை நீதியாக நடத்தத் தவறுகிறவர்களுக்கும் எதிராக நான் விரைந்துவந்து சாட்சி சொல்வேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
இறைவனிடமிருந்து களவாடல்
6“யெகோவாவாகிய நான் மாறாதவர். எனவேதான் யாக்கோபின் சந்ததியாகிய நீங்கள் அழிக்கப்படாதிருக்கிறீர்கள். 7உங்கள் முற்பிதாக்களின் காலத்திலிருந்து நீங்கள் என் விதிமுறைகளைவிட்டு விலகி, அவற்றைக் கைக்கொள்ளாமல் இருந்தீர்கள். இப்பொழுதோ என்னிடத்திற்குத் திரும்புங்கள், நானும் உங்களிடத்திற்குத் திரும்புவேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
“நீங்களோ, ‘நாங்கள் எவ்விதம் திரும்பவேண்டும்?’ என கேட்கிறீர்கள்?
8“ஒரு மனிதன் இறைவனிடமிருந்து கொள்ளையிடுவானோ? எனினும் நீங்கள் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறீர்கள்.
“ஆனால் நீங்களோ, ‘உம்மிடமிருந்து எப்படி நாங்கள் கொள்ளையடித்தோம்?’ என கேட்கிறீர்கள்.
“பத்தில் ஒரு பங்கிலும், காணிக்கைகளிலுமே என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள். 9நீங்கள் சாபத்துக்கு உட்பட்டவர்கள்; என்னிடமிருந்து கொள்ளையடிப்பதால் உங்கள் முழு தேசமும் சபிக்கப்பட்டதாகும். 10என் ஆலயத்தில் உணவு இருக்கும்படி, உங்கள் பத்தில் ஒரு பாகம் முழுவதையும் களஞ்சியத்திற்குக் கொண்டுவாருங்கள். இவ்வாறு என்னைச் சோதித்துப் பாருங்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நீங்கள் இவ்வாறு செய்யும்போது, நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, நிறைந்து வழியும்படி இடங்கொள்ளாத அளவு அதிக ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழியமாட்டேனோ என்று பாருங்கள். 11உங்கள் பயிர்களைப் பூச்சி புழுக்கள் தின்று விடாமலும், உங்கள் தோட்டங்களிலுள்ள திராட்சைக் கொடிகளிலிருந்து காய்கள் உதிராமலும் காத்துக்கொள்வேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். 12“அப்பொழுது எல்லா நாடுகளும், உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என அழைப்பார்கள். ஏனெனில் உங்கள் நாடு ஒரு மகிழ்ச்சி நிறைந்த நாடாக இருக்கும்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
இஸ்ரயேலர் யெகோவாவுக்கு எதிராகப் பேசுதல்
13“அத்துடன் நீங்கள் எனக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்” என யெகோவா சொல்கிறார்.
“ஆயினும் நீங்கள், ‘நாங்கள் உமக்கு எதிராக என்ன சொல்லியிருக்கிறோம்?’ எனக் கேட்கிறீர்கள்.
14“நீங்களோ, ‘இறைவனுக்குப் பணிசெய்வது வீணானது. அவருடைய கட்டளைகளை நிறைவேற்றி, சேனைகளின் யெகோவாவின் முன்பாக துக்கங்கொண்டாடுகிறவர்களாய் திரிந்து என்ன பயன் அடைந்தோம்? என்று சொல்கிறீர்கள். 15அத்துடன் நீங்கள், அகந்தையுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், தீமை செய்கிறவர்கள் செழிப்பாக வாழ்கிறார்கள் என்றும், இறைவனை எதிர்க்கிறவர்கள்கூட தண்டனை பெறாமல் தப்பிக்கிறார்கள்’ என்றும் சொல்கிறீர்கள்.”
உண்மையுள்ள ஆதாரங்கள்
16அதன்பின் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அதை யெகோவா செவிகொடுத்துக் கேட்டார்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையும், அவரது பெயரை கனம்பண்ணியவர்களையும் குறித்து, அவர் சமுகத்தில் ஒரு ஞாபகப் புத்தகச்சுருள் எழுதப்பட்டது.
17“எனக்கு அருமையான சொத்தை நான் சேர்க்கும் நாளில், அவர்கள் எனக்கொரு தனிப்பெரும் சொத்தாய் இருப்பார்கள் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஒருவன் தனக்குப் பணிசெய்யும் தன் சொந்த மகனை மனமிரங்கி காப்பாற்றுவது போல, நானும் அவர்களைக் காப்பாற்றுவேன். 18அப்பொழுது நீங்கள் நீதியானவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும், இறைவனுக்குப் பணி செய்கிறவர்களுக்கும் பணி செய்யாதவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் மறுபடியும் காண்பீர்கள்.
Currently Selected:
மல்கியா 3: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.